சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
குன்னூரில் சாரல் மழையால் சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
குன்னூர்
குன்னூரில் சாரல் மழையால் சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
முக்கிய சாலை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள டி.டி.கே. சாலை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த சாலை வழியாக எம்.ஆர்.சி. ராணுவ முகாம் மற்றும் கல்லூரிக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இது தவிர குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல பிரதான சாலையாக உள்ளது. இதனால் அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து மிகுதியாக காணப்படும். இதற்கிடையில் கடந்த ஆண்டு பலத்த மழை பெய்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீர் தேங்கி அந்த சாலை பழுதடைந்துவிட்டது. மேலும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது.
சேறும், சகதியுமாக...
இதையடுத்து அந்த சாலையில் தண்ணீர் தேங்காமல் தடுக்கும் வகையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டது. பின்னர் அந்த சாலைக்கு அடியில் செல்லும் ராட்ச குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறியது. அந்த குடிநீர் சாலையில் தேங்கியதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் சாலையில் குழி தோண்டி குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. ஆனால் அந்த குழியை சரிவர மூடவில்லை. தற்போது குன்னூர் பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால், அந்த இடம் சேறும், சகதியுமாக மாறிவிட்டது.
அவதி
இதனால் வழியாக செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்கின்றன. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, குன்னூரில் முக்கிய சாலை டி.டி.கே. சாலைதான். இந்த சாலையின் தற்போது நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து தரப்பினரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.