சாலையோர நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவு
சாலையோர ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.;

வேலூர்
சாலையோர ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் சாலைகள் அமைப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. பாதாளசாக்கடை பணிகள் நிறைவடைந்த இடங்களிலும், கால்வாய் அமைக்கும் பணி நிறைவடைந்த இடங்களிலும் தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் சாலைகளை ஆய்வு செய்தார். வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை பார்வையிட்டார். மேலும் அங்கு சாலையோரம் இருந்த பள்ளங்களை மூடவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது சாலையோரம் நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து டீக்கடைகள் உள்ளிட்ட கடைகளை வைத்திருந்தனர். அவற்றை அகற்ற அவர் உத்தரவிட்டார்.
இதேபோல ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் ஆய்வு செய்த அவர் அங்கு நடைபாதையில் இருந்த தள்ளுவண்டி கடைகளை அகற்றவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
ஆய்வின் போது 2-வது மண்டல உதவி கமிஷனர் வசந்தி, இளநிலை பொறியாளர் மதிவாணன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தடுக்க வேண்டும்
கமிஷனர் அசோக்குமார் அதிகாரிகளிடம் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகளும், அதன் அருகே நடைபாதையும் அமைக்கப்படுகிறது. அதில் பலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். கடைகளின் கூரையை சாலை வரை அமைத்து மக்கள் நடந்து செல்ல முடியாதவகையில் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பத்திலேயே ஆக்கிரமிப்பு செய்யாதவகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். சாலைகளை தினமும் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.