வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகளை விலக்கி தைப்பூச ஜோதி தரிசனம் தடையை மீறி பக்தர்கள் குவிந்தனர்

வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகளை விலக்கி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் தடையை மீறி பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர்.

Update: 2022-01-18 17:12 GMT

வடலூர், 

கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி 151-ம் ஆண்டு தைப்பூச விழா சத்திய ஞான சபையில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது. இதில் காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதேபோல் காலை 10 மணி,  மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி இன்று (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணி என 6 காலங்களில் கருப்பு, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு ஆகிய 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. 

பக்தர்கள் தரிசனம் 

கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அமலில் இருப்பதால், பக்தர்கள் தரிசனத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. வடலூரில் தைப்பூச விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இருப்பினும் தடையை மீறி ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனம் காண  குவிந்தனர். ஆனால் ஜோதி தரிசனம் நடந்த சத்தியஞானசபைக்குள் நுழைய போலீசார் அனுதிக்கவில்லை. 

இதனால் சத்தியஞான சபைக்கு எதிரே சற்று தொலைவில் நின்று தரிசனம் செய்தனர். அவர்கள் தனிமனித இடைவெளி எதையும் கடைபிடிக்காமல் தரிசனம் செய்து சென்றனர். 

அதிருப்தி 

அதே நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் மட்டும் உள்ளே சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அய்யப்பன் எம்.எல்.ஏ., இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், கடலூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஜெகதீசன் உள்பட பலர் ஜோதியை தரிசனம் செய்தனர்.

 விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

களையிழந்த வடலூர் நகரம்

வழக்கமாக ஜோதி தரிசனத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூருக்கு வருவார்கள். தைப்பூசத்தன்று விழாக்கோலம் பூண்டிருக்கும் வடலூர் நகரம், நேற்று கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளால் களையிழந்து காணப்பட்டது. 

இருப்பினும் ஜோதி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அணையா அடுப்பில் சமையல் செய்து தருமசாலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. பார்சல் மூலமாகவும் உணவு வினியோகம் செய்யப்பட்டது. 

நாளை திருவறை தரிசனம்

விழாவில் நாளை(வியாழக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்திப்பெற்ற இடத்தில் திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

இதற்காக வடலூர் சத்தியஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க, வள்ளலார் நடந்து சென்ற நைனார்குப்பம, கருங்குழி வழியாக மேட்டுக்குப்பத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூருக்கு கொண்டுவரப்படும்.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்