ஆண்டாள் நாச்சியார் கோவிலில் தங்கத்தாலி கொள்ளை
ஆண்டாள் நாச்சியார் கோவிலில் தங்கத்தாலி கொள்ளை;
உடுமலை அருகே ஆண்டாள் நாச்சியார் கோவிலில் தங்கத்தாலி மற்றும் தங்க பொட்டு ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
ஆண்டாள் நாச்சியார் கோவில்
உடுமலை அருகே குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 7 ஆண்டுகளாக அதே ஊரைச்சேர்ந்த அமிர்தகணேஷ் நிர்வாக பொறுப்பில் உள்ளார். அவரது தாயாரும் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான சரஸ்வதி கோவிலிலேயே தங்கியிருந்து கோவிலில் வழிபாடுகளை நடத்தி வருகிறார். இந்த கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த15 ந்தேதி சனிபிரதோஷ வழிபாடுகள் நடந்தன. இதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் வீட்டிற்கு கோவில் நிர்வாகி புறப்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில் நள்ளிரவு சரஸ்வதி, தனது மகனுக்கு போன் செய்து கோவிலுக்கு வரும்படி அழைத்துள்ளார். அவர் உடனடியாக கோவிலுக்கு சென்று பார்த்தார். அப்போது கோவில் கருவறை திறந்திருந்தது. அங்கு ஆண்டாள் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கத்தாலி மற்றும் தலா கால் பவுன் எடை உள்ள 2 தங்க பொட்டு ஆகியவை கொள்ளை போயிருந்தது. மர்ம ஆசாமிகள் கோவிலுக்குள் புகுந்து, மரகபோர்டில் வைத்திருந்த கருவறை சாவியை எடுத்து கருவறையை திறந்து ஆண்டாள் கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தாலி மற்றும் தங்க பொட்டுகளை கொள்ளையடித்துச்சென்றுள்ளது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இந்த கொள்ளை சம்பவம் குறித்து உடுமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.வி.சுஜாதா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். விசாரணையில் சம்பவத்தன்று நள்ளிரவில் 4 மர்ம ஆசாமிகள் கோவிலுக்கு வந்ததாகவும், அதில் 3பேர் வேட்டி அணிந்திருந்ததாகவும், தோளில் துண்டு போட்டிருந்ததாகவும், ஒருவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்கள்தான் கோவிலில் கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.