பூம்புகார் கடற்கரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை வெறிச்சோடியது

முழு ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டத்தில் காணும் பொங்கல் விழா களையிழந்தது. பூம்புகார் கடற்கரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை வெறிச்சோடியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2022-01-16 15:40 GMT
மயிலாடுதுறை:
முழு ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டத்தில்  காணும் பொங்கல் விழா களையிழந்தது. பூம்புகார் கடற்கரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை வெறிச்சோடியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் முதலில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் விழா களையிழந்தது. 
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். 
நேற்று முழு ஊரடங்கு காரணமாக எந்த ஒரு கிராமத்திலும் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இதனால் மயிலாடுதுறை நகர் மட்டுமின்றி கிராமங்களிலும் தெருக்கள் வெறிச்சோடின. மயிலாடுதுறை நகரின் உள்ள காமராஜர் பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ்நிலையம் ஆகிய 2 பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. 
15 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன
முக்கிய வீதிகளான பட்டமங்கலத்தெரு, காந்திஜி சாலை, கச்சேரி சாலை, பூக்கடை தெரு, கூறைநாடு, ெரயிலடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. நகரில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது முககவசம் அணியாமல் மற்றும் தேவையின்றி சுற்றித்திரிந்தவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சாலையில் சென்ற கார், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும்  நிறுத்தி சோதனையிட்டனர்.  உணவகங்களில் பார்சல்கள் வழங்க அனுமதிக்கப்பட்டு இருந்தும் நகரில் ஒருசில உணவகங்களை தவிர, பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் நேற்று 15 ஆயிரம் கடைகள் மூடப்பட்டிருந்தன.
சீர்காழி
சீர்காழி பகுதியில் முழு ஊரடங்கால் மருந்து கடைகளை தவிர ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடை, காய்கறி கடை, பழக்கடை, பூக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மேலும் சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். சீர்காழி,   வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் வகையில் சீர்காழி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் இறைச்சி மீன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் நகர் பகுதி முழுவதும் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
முழு ஊரடங்கு காரணமாக சீர்காழியில் காணும் பொங்கல் விழா களையிழந்தது. வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி சட்டைநாதர் கோவில்,  பூம்புகார் சுற்றுலாத்தலம், திருமுல்லைவாசல் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு சுற்றுலாத்தலம்,  கோவில்களுக்குச் செல்ல முடியாமல்  ஏமாற்றம் அடைந்தனர்.
திருவெண்காடு
காணும் பொங்கல் தினத்தன்று பூம்புகார் கடற்கரைக்கு ஏராளமான மக்கள் வருவது வழக்கம். பூம்புகார் கடற்கரைக்கு வரும் மக்கள். சிலப்பதிகார கலைக்கூடம், பாவை மன்றம் ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள். முழு ஊரடங்கு காரணமாக பூம்புகார் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. பூம்புகார் தர்ம குளம் கடைத்தெருவில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  பூம்புகார், வானகிரி, திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.  பூம்புகார், திருவெண்காடு, மங்கைமடம், திருமுல்லைவாசல், கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், கீழப்பெரும்பள்ளம் கேது கோவில், திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவில் உள்ளிட்ட  கோவில்கள் மூடப்பட்டு இருந்தன. 
தரங்கம்பாடி
 தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தரங்கம்பாடியில் வரலாற்று சிறப்புமிக்க தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மூடப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக காணும் பொங்கலையொட்டி தரங்கம்பாடி கடற்கரை களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டது.. பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 26 அரசு பஸ்கள்  நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடாததால். பொறையாறு காமராஜர் பஸ் நிலையம் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.  பொறையாறு மற்றும் நல்லாடை நண்டலாறு சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
 தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி உள்ளிட்ட தாலுகா பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தரங்கம்பாடி கடலோர போலீசார் மற்றும் பொறையாறு, செம்பனார்கோவில், பெரம்பூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்