16 தொழிலாளர்களுக்கு கொரோனா; மீன்ஏற்றுமதி நிறுவனத்தை மூட உத்தரவு
16 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மீன் ஏற்றுமதி நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது வேகமாக உயர்ந்து வருவது தெரிந்ததே. ஆரம்பத்தில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்த தொற்று தற்போது இரட்டை இலக்கை நோக்கியும் 3 இலக்கத்தை நெருங்கியும் சென்று கொண்டிருக்கிறது.
நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக மாவட்டத்தில் தொற்று பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் கூறியதாவது:- மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிராமங்கள் தோறும் மருத்துவ குழு நேரில் சென்று முகாமிட்டு காய்ச்சல் பரிசோதனை செய்து தொற்று உள்ளதா? என்று சோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சை பரிந்துரை செய்து வருகின்றனர்.நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முககவசம் அணிதல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் தடுப்பூசி போடாதவர்களின் மூலம் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் மண்டபம் அருகே மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 40 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருமிநாசினி தெளித்து ஒரு வார காலத்திற்கு அந்த நிறுவனத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.