பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட்டம் கடைகளில் பொருட்கள் விற்பனை மும்முரம்
பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி கடைகளில் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
புதுக்கோட்டை:
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கரும்பு தான். வீடுகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, காய்கறிகளை படையலிட்டும், கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை வைத்து, பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். புதுக்கோட்டையில் கரும்பு கட்டுகள் ஆங்காங்கே விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டு கரும்பு ரூ.300 வரைக்கும் விற்பனையாகிறது. இதேபோல மஞ்சள் கொத்து, பனங்கிழங்கு ஆகியவையும் விற்பனையாகி வருகின்றன.
பொங்கல் சீர்
திருமணமான முதல் ஆண்டு மணமக்களுக்கு இந்த ஆண்டு தல பொங்கலாகும். மகளை மணமுடித்து கொடுத்த வீட்டிற்கு பெற்றோர் பொங்கல் சீர் கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். இதில் கரும்பு, வாழைத்தார், மஞ்சள் கொத்து உள்பட பொருட்கள் இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில் பொங்கல் சீர் கொடுப்பதற்காக பொதுமக்கள் பலர் கரும்பு மற்றும் பொருட்களை வாங்கி சென்றதை காணமுடிந்தது. இதனால் சந்தைபேட்டை, கீழ ராஜ வீதியில் உள்ள கடைகளில் கூட்டம் நேற்று அலைமோதியது.