அரசு போக்குவரத்து கழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த டிரைவர் பணியிடை நீக்கம் போலீசார் விசாரணை
அரசு போக்குவரத்து கழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த டிரைவர் பணியிடை நீக்கம் போலீசார் விசாரணை
கண்டாச்சிமங்கலம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டத்தின் மண்டல பொது மேலாளர் செல்வம் தியாகதுருகம் போலீஸ நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மீனாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (வயது 44) என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியில் சேர்ந்தார். அப்போது அவரிடமிருந்து பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறப்பட்டன.
இதில் மாற்றுச் சான்றிதழின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக அதை உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 6-ம் வகுப்பு வரை படித்து வந்த வேலாயுதம் படிப்பை இடையில் நிறுத்தியவர் என்பதும், அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து வேலாயுதம் மீது தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அரசு போக்குவரத்து கழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.