சாமியார் காளிசரண் மீண்டும் கைது
மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக சாமியார் காளிசரண் மகாராஜ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.;
வார்தா,
மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக சாமியார் காளிசரண் மகாராஜ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மகாத்மா காந்தி குறித்து அவதூறு
சத்தீஸ்கார் மாநில தலைநகர் ராய்பூரில் கடந்த டிசம்பர் 26-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மராட்டியத்தை சேர்ந்த சாமியார் காளிசரண் மகாராஜ், மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராய்பூர் போலீசார் சாமியார் காளிசரண் மகாராஜை கைது செய்து இருந்தனர்.
இந்தநிலையில் புனேயில் நடைபெற்ற “சிவ் பிரதான் தின்” நிகழ்ச்சியின் போது, பிற மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக புனே போலீசார் சாமியார் காளிசரணை கடந்த மாதம் 19-ந் தேதி ராய்பூர் ஜெயிலில் இருந்து காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவருக்கு புனே கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் மீண்டும் ராய்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
சாமியார் மீண்டும் கைது
இதற்கிடையே மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக மராட்டியத்தில் உள்ள வார்தா போலீசாரும் வழக்கு பதிவு செய்திருந்தனர். எனவே கோர்ட்டு அனுமதியுடன் வார்தா போலீசார் ராய்பூர் சிறையில் இருந்த சாமியார் காளிசரணை தங்களது காவலில் எடுத்து அதிகாலை 5 மணி அளவில் வார்தாவுக்கு அழைத்து வந்தனர்.
இந்தநிலையில் விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டு உள்ளூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை கோர்ட்டு நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.
-----------