களத்தில் களமாட துடிக்கும் ஜல்லிக்கட்டு காளை
களத்தில் களமாட துடிக்கும் ஜல்லிக்கட்டு காளை களத்தில் களமாட துடிக்கும் ஜல்லிக்கட்டு காளை
வீரமும், விவேகமும் தமிழர்களின் உதிரத்தோடு கலந்த ஒன்று. கடல் கடந்து வீரத்தை நிலைநாட்டி வெற்றிக்கொடி நாட்டியவர்கள் வீரதமிழர்கள். தமிழர்களின் வீரம், உபசரிக்கும் பண்பு, கலாசாரம், பண்பாடு ஆகியவை உலகை திரும்பி பார்க்க வைத்து திகைக்க செய்கிறது. உலகில் தனித்துவமான தமிழர்கள் கொண்டாடும் திருநாள் பொங்கல். உலகில் உள்ள உயிரினங்களை எல்லாம் வாழ வைக்கும் சூரியனுக்கும், காலமெல்லாம் கைகொடுக்கும் கால்நடை செல்வமான மாடுகளை வணங்குவதே தமிழர் திருநாளான பொங்கல் திருநாள்.
அது மட்டுல்ல வீரத்தை வெளிகாட்ட களம் ஒன்று வேண்டும் அல்லவா. அதுதான் ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு. தமிழர்களின் விளையாட்டுக்களாக சிலம்பம், கபடி, வழுக்கு மரம், வில் வித்தை உள்ளிட்டவைகளாக கருதப்பட்டாலும், அதிலும் மிக முக்கிய குறிப்பிட்ட இடத்தை வகிப்பது ஜல்லிக்கட்டு.
சங்க காலம் தொட்டு ஏறுதழுவுதல் என்ற பெயரில் நடத்தப்பட்டு, தற்போது அது ஜல்லிக்கட்டாக மறுவியுள்ளது. தமிழர்களின் வீரத்தையும், விவேகத்தையும் மட்டுமல்லாது தாங்கள் வளர்க்கும் பிராணியான காளைகள் மீது கொண்டுள்ள மதிப்பு, மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும் அது அமைந்தது.அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரியம் என்றாலே நினைவுக்கு வருவது தைப்பொங்கல் திருவிழா தான். அதிலும் சீறிப்பாயும் காளைகளும், அவற்றை அடக்க துடிக்கும் காளையர்களும் என ஜல்லிக்கட்டு விழா களை கட்டும்
தமிழகத்தின் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. அதே போல் பாலமேடு, அவனியாபுரம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கிராமப்பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. தென் தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண அந்ததந்த ஊரை சேர்ந்தவா்கள் மட்டுமின்றி வௌியூர், வெளிமாவட்ட மக்களும் திரண்டு வருவர் என்பது விசேஷமாகும்.இடையிடையே நடந்த சிற்சில சம்பவங்களால் அந்த போட்டிகள் தடை பட்டாலும், ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் முயற்சியால் மீண்டும் பாரம்பரியத்தை மீட்டெடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த போட்டிகளுக்கென பிரத்தியேகமாக வளர்க்கப்படும் காளைகளுக்கு போட்டிகளுக்கு முன்னதாக பல்வேறு பயிற்சிகள் காளை வளர்ப்பவர்களால் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்குமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதியளித்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த இளைஞர்கள் மற்றும் காளை வளர்ப்போர் போட்டிகளுக்காக ஜல்லிக்கட்டு காளைகளை தயார் செய்வதிலும், மாடுபிடி வீரர்கள் களத்தில் வெற்றிக்கனியை சுவைக்க தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உணவு முறையிலிருந்து களத்தில் வீரர்களை பந்தாடுவதற்கான பயிற்சிகள் வரை அளிக்கப்படுகிறது. இளங்கன்றிலிருந்தே போட்டிகளுக்காக தயார் செய்யப்படும் காளைகளுக்கு தேங்காய், பருத்தி, கடலை, வெல்லம், உள்ளிட்ட சத்து நிறைந்த உணவு வகைகள் வழங்கப்படுகிறது. மேலும், காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, சாலையில் ஓடுவதற்கான பயிற்சி, மண்ணை குத்தும் பயிற்சி, உறிப்பாய்ச்சுதல், வீரர்களின் பிடியில் இருந்து சிக்காமல் தாவிக்குதித்து வாடி வாசலில் இருந்து வெளியேறி மின்னல் வேகத்தில் எல்லை கோட்டை கடப்பதற்காக பயிற்சிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், பழக்கு வாடிவாசல் அமைத்து அதில் காளைகளை அவிழ்த்து, வீரர்கள் பிடித்தும் பயிற்சி பெறுகின்றனர்.
குறிப்பாக திருப்பூர் பகுதிகளில் காங்கேயம் இன காளைகளுக்கு பிரசித்தி பெற்ற காங்கேயம், முத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும், பொங்கலூர், அலகுமலை, பல்லடம் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், திருப்பூர் வீரபாண்டி பிரிவு, வாய்க்கால்மேடு, போயம்பாளையம், அவிநாசிநகர், குருவாயூரப்பன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஜல்லிக்கட்டு காளைகள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் போட்டிகளில் இந்த காளைகள் கலந்து கொள்கின்றன. அங்கு பெரும் பரிசு என்பது போக்குவரத்து செலவுக்கு கூட ஈடுகட்ட முடியாது என்ற நிலை இருந்தாலும், தங்கள் காளைகளின் பெருமைகளை வெளிகொணர்வதற்காகவும், பெருமையை நிலை நாட்டவும், கவுரவத்திற்காகவுமே தாங்கள் போட்டிகளில் காளைகளை கலந்து கொள்ள செய்வதாக காளை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.
களத்தில் வீரர்களை பந்தாடும் காளைகள், தங்கள் வளர்ப்பு எஜமானர்களின் குடும்பத்தினருக்கு சாதாரண ஒரு செல்லப்பிராணியாகவே உள்ளது. இதை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே காளைகள் வளர்போரும் கருதுகின்றனர். சாதாரண ஏழை விவசாயி ஒரு ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பது என்பது யானை கட்டி போரடிப்பதற்கு ஈடாகவே கருதப்படுகிறது. ஆனாலும், தங்கள் கவுரவத்தையும், பெருமையையும் தாங்கள் வளர்க்கும் காளை பறைசாற்றும் என்பதால் மேற்கண்ட சிரமங்களை அவர்கள் பெரிதாக நினைப்பதில்லை என காளைகள் வளர்க்கும் திருப்பூர் போயம்பாளையம் அவிநாசிநகரைச் சேர்ந்த விஜயகுமார் தெரிவிக்கிறார்.
தமிழர்களின் வீரத்தை உலகறியச் செய்யும் விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை இன்றி நடைபெற வேண்டும், இதில் கலந்து கொள்ளும் காளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மகத்தான இந்த விளையாட்டின் பெருமையை நிலை நாட்டவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.