பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. இதனால் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்தனர்.
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது, மக்கள் கரும்பு, மஞ்சள்குலை, வாழைத்தார், பனங்கிழங்கு, பொங்கல் பூ உள்ளிட்டவற்றை சூரியபகவானுக்கு படைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதனால் பொங்கல் பொருட்கள் மார்க்கெட்டில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்தது. இதனால் மார்க்கெட் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். தூத்துக்குடியில் ஒரு கட்டு கரும்பு ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று மஞ்சள் குலை ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டன. 25 கிழங்குகள் அடங்கிய ஒரு கட்டு பனங்கிழங்கு ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையானது.
வாழைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழை காரணமாக வாழை தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து குறைந்த அளவிலான வாழைத்தார்களே தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த உள்ளன.
பெரும்பாலும் சத்தியமங்கலம், தேனி, சின்னமனூர், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. வழக்கமாக பொங்கலுக்கு சுமார் 400 டன் வரை வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் நேற்று தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு சுமார் 100 டன் வாழைத்தார்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. வாழைத்தார் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து உள்ளது.
பொங்கல் பானை
தூத்துக்குடி மார்க்கெட்டில் கதலி ரூ.350-க்கும், கோழிக்கோடு ரூ.500 முதல் ரூ.600 வரையும், சக்கை ரூ.500 முதல் ரூ.600-க்கும், கற்பூரவள்ளி ரூ.550-க்கும், செவ்வாழை ரூ.800 முதல் ரூ.900-க்கும், நாடு ரூ.650-க்கும், பச்சை வாழை ரூ.300-க்கும், மட்டி ரூ.150 முதல் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மக்கள் இந்த வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.
இதே போன்று வாழை இலை சிறிய கட்டு ரூ.800-க்கும், பெரிய வாழை இலைக்கட்டு ரூ.1000 முதல் ரூ.1100 வரையும் விற்பனை செய்யப்பட்டன. பொங்கல் பானைகள் ரூ.80 முதல் ரூ.100 வரையும், மண் அடுப்பு ரூ.80-க்கும் விற்கப்பட்டன. ெபாங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ண கோலப் ெபாடிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
காய்கறி
பொங்கல் பண்டிகை அன்று அனைத்து காய்கறிகளையும் சேர்த்து குழம்பு வைப்பது வழக்கம். இதனால் மக்கள் காய்கறிகளையும் வாங்கி சென்றனர். தூத்துக்குடி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
கத்தரிக்காய் - ரூ.60, தக்காளி - ரூ.40, மிளகாய் - ரூ.80, அவரைக்காய் - ரூ.80, உருளைக்கிழங்கு - ரூ.30, சேனைக்கிழங்கு - ரூ.40, பீன்ஸ் - ரூ.80, முருங்கைக்காய் - ரூ.250, கேரட் - ரூ.75, சவ்சவ் - ரூ.40, சேனைக்கிழங்கு - ரூ.40, சேம்பு - ரூ.80, சிறியவெங்காயம் - ரூ.60-70, பல்லாரி - ரூ.40, முட்டைக்கோஸ் - ரூ.60, வெண்டைக்காய் -ரூ.80.
கோவில்பட்டி
கோவில்பட்டி நகரில் நேற்று காலை முதல் மெயின் ரோடு, மார்க்கெட் ஆகிய பகுதிகளில் கரும்பு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு, கண்ணுப் பிள்ளை செடி மற்றும் காய்கறிகள், பழங்கள், சீதன பொருட்களை வாங்க பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வந்தனர். போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை அவர்கள் வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட்டில் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. இரவு வரை மக்கள் கூட்டம் காணப்பட்டது.
பொதுமக்கள் காய்கறிகளுடன் மஞ்சள் குலை, கரும்பு, பனங்கிழங்குகளை அதிக அளவில் வாங்கிசென்றனர். 15 எண்ணம் கொண்ட கரும்பு கட்டு ரூ.350 முதல் 450 வரையும், மஞ்சள் குலை ரூ.30 முதல் 50 வரையும், காய்ந்த பருத்தி செடி கட்டு ரூ.80 முதல் 100 வரையும், பனங்கிழங்கு கட்டு ரூ.40 முதல் 60 வரையும், கண்ணுப்பிள்ளை செடி ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் மார்க்கெட்டுக்கு வந்திருந்த பெரும்பாலான மக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொருட்களை வாங்கி சென்றனர். வியாபாரிகளில் பெரும்பாலானோர் முககவசம் அணியாமல் இருந்தனர்.
போலீசார் பாதுகாப்பு
நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், சபாபதி, நாககுமாரி, ராணி, பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.