நெல்லையில் இருந்து வெளியூர்களுக்கு 225 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லையில் இருந்து வெளியூர்களுக்கு 225 சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.
நெல்லை:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோவை, பெங்களூரு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 200 சிறப்பு பஸ்களும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 25 விரைவு பஸ்களும் நெல்லையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நேற்று இயக்கப்பட்டன. '
நெல்லையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் இந்த பஸ்களில் புறப்பட்டு சென்றனர். இதனால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட சற்று அதிகமாக காணப்பட்டது.
இந்த பஸ்கள் பெரிய நகரங்களில் இருந்து புறப்படும் நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட பயணிகளை அழைத்து வருவதற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் சுழற்சி முறையிலும் தொடர்ந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.