9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம்
முழு சுகாதார திட்ட வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிர்வாக நிதியை காலதாமதம் இன்றி அனைத்து வட்டாரங்களுக்கும் உடனடியாக விடுவிடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் வடிவேல் கூறும் போது, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர் என்றார்.