கூலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-01-11 21:23 GMT
ஆத்தூர்,
ஜல்லிக்கட்டு
ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவினர் திட்டமிட்டு இதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். 
இதற்காக சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் ஆகியோரிடம் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். குறிப்பாக வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்து செல்லும் இடத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது. 
கடும் கட்டுப்பாடுகள்
இந்த ஜல்லிக்கட்டில் சேலம், நாமக்கல், திருச்சி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வது வழக்கம். தற்போது கொரோனா தொற்று பரவல் உள்ள காரணத்தால்  ஜல்லிக்கட்டு நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
குறிப்பாக பார்வையாளர்கள் கூடுவதை தவிர்க்கவும், நோய்களை தடுக்கவும் சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி மருத்துவம், கால்நடை மருத்துவம், வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் முன்னேற்பாடு பணிகளை கண்காணித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்