சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு 256 பேருக்கு தொற்று
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று 2 மடங்கு அதிகரித்தது. அதாவது 256 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
சேலம்,
இருமடங்கு அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 50-க்கும் குறைவாக இருந்த பாதிப்பு சில நாட்களுக்கு முன்பு தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. நேற்று முன்தினம் 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் ஒரே நாளில் இருமடங்கு அதிகரித்தது. இதன்படி 256 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகர் பகுதியில் 162 பேர் பாதிக்கப்பட்டனர். கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், எடப்பாடி, காடையாம்பட்டி, நங்கவள்ளி, தலைவாசல், ஏற்காட்டில் தலா 2 பேர் பாதிப்படைந்தனர்.
நடவடிக்கை
வாழப்பாடியில் 3 பேருக்கும், தாரமங்கலம், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், மேச்சேரி, கெங்கவல்லியில் 6 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. மேலும் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு வந்த 3 பேர் உள்பட மொத்தம் 256 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 582 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஒரு லட்சத்து 892 பேர் குணமடைந்து உள்ளனர். 1,732 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.