பெண் போலீசை பலாத்காரம் செய்ய முயற்சி: கைதான ஏட்டு பணி இடைநீக்கம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவு
பெண் போலீசை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் கைதான ஏட்டுவை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டார்.
சேலம்,
பலாத்காரம் செய்ய முயற்சி
ஈரோடு பழைய ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 32). போலீஸ் ஏட்டான இவர் சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டின் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவர் ஈரோட்டில் வசித்து வரும் 29 வயதுடைய பெண் போலீஸ் ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய வீட்டுக்கு சென்ற செல்வன் பெண் போலீசை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
பணி இடைநீக்கம்
இதையடுத்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வனை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான விசாரணை அறிக்கையை ஈரோடு மாவட்ட போலீசார், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பினர்.
இதையடுத்து காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் துறை ரீதியான நடவடிக்கையாக போலீஸ் ஏட்டு செல்வனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் நேற்று உத்தரவிட்டார்.