கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா; முதல்-மந்திரியின் மகனுக்கும் தொற்று உறுதி

கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-11 21:09 GMT
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் மகன் பரத்.
பெங்களூரு: கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

3-வது அலை

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன் தாக்குதலில் இருந்து மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், போலீசாரும் தப்ப முடியவில்லை. ஏற்கனவே பெங்களூருவில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனிமையில் உள்ளனர். அதுபோல் பா.ஜனதா மாநில தலைவரும், எம்.பி.யுமான நளின்குமார் கட்டீலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் ஒரு மந்திரி பாதிப்பு

இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அதாவது, கர்நாடக மந்திரிசபையில், சட்டத்துறையை நிர்வகிக்கும் மாதுசாமிக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. 
அவர் நேற்று முன்தினம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியில் நடைபெற்ற அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். 

அதில் பங்கேற்ற அதிகாரி ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து மாதுசாமி பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர் துமகூருவில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இந்த தகவலை அவரே தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி சிறப்பு கமிஷனர்

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் (சுகாதாரம்) திரிலோக்சந்த்துக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். முக்கிய அதிகாரிகளை கொரோனா தாக்கி வருவதால், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பசவராஜ் பொம்மையின் மகனுக்கும் தொற்று

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. அவர் லேசான பாதிப்புகள் இருந்ததை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். அவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் பரத் பசவராஜ் பொம்மைக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. பசவராஜ் பொம்மையின் மனைவி, மகளின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. அந்த முடிவுகள் வந்தால் அவர்களுக்கும் பாதிப்பு உறுதியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பசவராஜ் பொம்மையின் வீட்டில் வேலை செய்கிறவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்