கொரோனா நோயாளிகளுக்காக பெங்களூருவில் புதிதாக 27 சிகிச்சை மையங்கள்

பெங்களூருவில் நேற்று கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெங்களூருவில் புதிதாக 27 சிகிச்சை மையங்கள் அமைக்கவும், தினமும் 1.30 லட்சம் பரிசோதனை நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2022-01-11 21:04 GMT
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெங்களூருவில் புதிதாக 27 சிகிச்சை மையங்கள் அமைக்கவும், தினமும் 1.30 லட்சம் பரிசோதனை நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. 

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை சுருட்டி அடித்து வருகிறது. இதில் சாதாரண மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள், போலீசார், அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெங்களூருவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த மாதம் இறுதி வரை பாதிப்பு எண்ணிக்கை 500-க்கும் குறைவாக இருந்தது. 

அதன்பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. 2 ஆயிரம் என்ற அளவில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்தது. தற்போது பெங்களூரு மாநகரில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்தை நெருங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் மாநிலத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 473 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 452 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 14 ஆயிரத்து 473 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 78 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 1,356 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 66 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது. 73 ஆயிரத்து 260 பேர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 10.30 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூருவில் 10 ஆயிரம் பேர்

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பல்லாரியில் 101 பேர், பெலகாவியில் 79 பேர், பெங்களூரு புறநகரில் 160 பேர், பெங்களூரு நகரில் 10,800 பேர், பீதரில் 43 பேர், சாம்ராஜ்நகரில் 86 பேர், சிக்பள்ளாப்பூரில் 91 பேர், சிக்கமகளூருவில் 41 பேர், சித்ரதுர்காவில் 47 பேர், தட்சிண கன்னடாவில் 583 பேர், தாவணகெரேயில் 56 பேர், தார்வாரில் 178 பேர், கதக்கில் 21 பேர், ஹாசனில் 121 பேர், கலபுரகியில் 109 பேர், குடகில் 29 பேர், கோலாரில் 139 பேர், மண்டியாவில் 263 பேர், மைசூருவில் 562 பேர், ராய்ச்சூரில் 29 பேர், ராமநகரில் 59 பேர், சிவமொக்காவில் 136 பேர், துமகூருவில் 332 பேர், உடுப்பியில் 250 பேர், உத்தரகன்னடாவில் 106 பேர், விஜயாப்புராவில் 20 பேர், யாதகிரியில் 13 பேர் உள்ளனர்.

மாநிலத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 3 பேரும், கோலார், உத்தரகன்னடாவில் தலா ஒருவரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பசவராஜ் பொம்மை ஆலோசனை

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள வீட்டில் தனிமையில் உள்ளார். 
நேற்று அவர் வீட்டில் இருந்தபடி நிபுணர் குழுவினருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், தலைமை செயலாளர் ரவிக்குமார், நிபுணர் குழு தலைவர் டாக்டர் சுதர்சன் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

1.30 லட்சம் பரிசோதனைகள்

இந்த கூட்டத்தில் கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றியும், பெங்களூரு மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பெங்களூருவில் 27 கொரோனா கண்காணிப்பு மையங்களை தொடங்குவது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். பெங்களூருவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால் நகரில் தினமும் 1.30 லட்சம் பரிசோதனைகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு சிகிச்சை

உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் இதர பள்ளிகளை கொரோனா பரவல் அடிப்படையில் அவற்றை மூடுவது குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை இந்த மாதம் இறுதி வரை அதாவது 31-ந்தேதி வரை விஸ்தரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

தாலுகா, மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் தொடங்கப்படும். குழந்தைகளின் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளை தேவையான அளவில் கொள்முதல் செய்து கையிருப்பு வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வித்துறை இணைந்து 15 நாட்களுக்கு ஒரு முறை குழந்தைகளின் உடல்நிலையை பரிசோதனை செய்யும்.

வீட்டு தனிமை

பொது இடங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். அவர்களுக்கு மருந்து தொகுப்பு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா கண்காணிப்பு மையத்தில் போதிய வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு மையங்களில் பயிற்சி டாக்டர்கள் மற்றும் நர்சிங் படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். பெங்களூருவில் உடனடியாக 27 கொரோனா கண்காணிப்பு மையங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாற்று ஏற்பாடுகள்

மகர சங்கராந்தி பண்டிகையின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஒரு வழிகாட்டுதலை வருவாய்த்துறை வெளியிடும். தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி விரைவாக போடப்படும். பொதுக்கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. எந்த விதமான திருவிழாக்களுக்கும் அனுமதி இல்லை. மார்க்கெட்டுகளில் மக்கள் நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். அதாவது விளையாட்டு மைதானங்களில் தற்காலிகமாக மார்க்கெட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

மேலும் செய்திகள்