பெண்ணிடம் 8 பவுன் சங்கிலிகள் பறிப்பு
பெண்ணிடம் 8 பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
கொள்ளிடம் டோல்கேட்:
8 பவுன் சங்கிலிகள் பறிப்பு
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள வி.என்.நகர், பி.எஸ்.எஸ். கார்டனை சேர்ந்த குமாரின் மனைவி விமலா (வயது 59). இவர் நேற்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், விமலா கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமலா திருடன்..., திருடன்... என்று சத்தம் போட்டார். இருப்பினும் அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலி மற்றும் 2 பவுன் சங்கிலி என 8 பவுன் சங்கிலிகளை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.
போலீசார் விசாரணை
விமலாவின் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.