மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு பலாத்காரம்; 5 சிறுவர்கள் கைது
கலபுரகியில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 5 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கலபுரகி: கலபுரகியில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 5 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கூட்டு பலாத்காரம்
கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனில் ஒரு காலனியை சேர்ந்தவள், 13 வயது சிறுமி. இந்த சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 5 பேர் வீடு புகுந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சிறுமி மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி என்பதால் அவளால் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி பெற்றோரிடம் கூற இயலவில்லை. இதற்கிடையே சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பெற்றோர், சிறுமியை கலபுரகி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது தான் சிறுமி கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைகேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் பற்றி பெற்றோர், கலபுரகி பல்கலைக்கழக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
5 சிறுவர்கள் கைது
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 15 வயது முதல் 16 வயதுடைய 5 சிறுவர்கள் அடிக்கடி சிறுமியின் வீட்டு அருகில் விளையாட வந்து சென்றுள்ளனர். இதனால் அவர்கள், சிறுமியின் பெற்றோருடன் நட்பாக பழகி வந்துள்ளனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 5 சிறுவர்களும் பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் வீடு புகுந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 5 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 5 பேரும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.