வேர் அழுகல் நோயினால் உளுந்து மகசூல் பாதிப்பு

வெம்பக்கோட்டை பகுதியில் வேர் அழுகல் நோயினால் உளுந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2022-01-11 20:36 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை பகுதியில் வேர் அழுகல் நோயினால் உளுந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
உளுந்து சாகுபடி 
வெம்பக்கோட்டை ஒன்றியம் எட்டக்காபட்டி, தாயில்பட்டி, வெற்றிலையூரணி, வல்லம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200 ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  சென்ற ஆண்டு குவிண்டாலுக்கு ரூ. 7 ஆயிரம் விலை கிடைத்ததால் விவசாயிகள் உளுந்தை ஆர்வமுடன் புரட்டாசி மாதத்தில் பயிரிட்டனர். ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதத்தில் பெய்த தொடர் மழை காரணமாக வேர் அழுகல் நோயினால் உளுந்து பயிர்கள் போதிய வளர்ச்சி அடையவில்லை.
இதனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. ஆதலால் தை மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய பயிர்களை மார்கழி மாதத்தில் அறுவடை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ராமசாமி கூறியதாவது:- 
உளுந்துக்கு சென்ற ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.7,000 கிடைத்தது. இதனால் இந்த ஆண்டு கூடுதலாக விலை கிடைக்கும் என நினைத்து அதிக அளவு உளுந்து சாகுபடி செய்தோம். ஆனால் தொடர் மழை காரணமாகவும், போதிய வெப்பம் கிடைக்காததால் செடிகள் வளர்ச்சி அடையாமல் வாடிய நிலையில் உள்ளது. 
ஆதலால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அறுவடையை தற்போது தொடங்கி விட்டோம். தற்போது உளுந்து விலை ரூ. 6,500 ஆக உள்ளது. சாகுபடிக்கு செலவு செய்த பணம் கூட கிடைக்குமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்