கொல்லங்கோடு நகராட்சியில் பெண் வாக்காளர்கள் அதிகம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கொல்லங்கோடு நகராட்சியில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.;

Update: 2022-01-11 20:31 GMT
நாகர்கோவில், 
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கொல்லங்கோடு நகராட்சியில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
தரம் உயர்வு
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாகவும், கொல்லங்கோடு பேரூராட்சி நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சியை விரிவுபடுத்தும் பணிகள் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சியுடன் தெங்கம்புதூர் மற்றும் ஆளூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டன. இதே போல கொல்லங்கோடு நகராட்சியுடனும் பல்வேறு பகுதிகள் சேர்க்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் நடந்தது. அதற்காக அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்பு கூட்டங்களும் அவ்வப்போது நடந்தது.
பெண் வாக்காளர்கள் அதிகம்
இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்காக நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கொல்லங்கோடு நகராட்சி ஆகியவற்றின் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
 அதன்படி நாகர்கோவில் மாநகராட்சியில் தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 670 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 850 பெண் வாக்காளர்களும், 11 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 மேலும் கொல்லங்கோடு நகராட்சியில் 25 ஆயிரத்து 303 ஆண் வாக்காளர்களும், 25 ஆயிரத்து 576 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் என மொத்தம் 50 ஆயிரத்து 883 வாக்காளர்கள் உள்ளனர்.
பெயர் சேர்த்தல்
இதுபற்றி கலெக்டர் அரவிந்த் கூறுகையில், “நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் அல்லது பட்டியலில் உள்ள விவரத்திற்கு மறுப்புரை தர விரும்புவோர் சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் கோரிக்கையோ அல்லது மறுப்புரையோ தரலாம். நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய குறிப்பிடப்படும் இறுதி நாள் வரை மாற்றம் கோரி வரப்பெறும் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுதொடர்பான ஆணைகள் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் முறையாக பதியப்படும்” என்றார்.  

மேலும் செய்திகள்