காட்டாற்றை கடந்து செல்ல பாலம் அமைக்கப்படுமா
அதிராம்பட்டினம் அருகே மாளியக்காடு ஊராட்சியில் காட்டாற்றை கடந்து செல்ல பாலம் அமைக்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் அருகே மாளியக்காடு ஊராட்சியில் காட்டாற்றை கடந்து செல்ல பாலம் அமைக்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த பகுதியில் இருந்து இடுபொருட்களை விளைநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
காட்டாற்று வெள்ளம்
அதிராம்பட்டினம் அருகே உள்ள மாளியக்காடு, சேண்டாக்கோட்டை, தொக்காலிக்காடு, அக்கரைவயல் உள்ளிட்ட கிரமங்களை சேர்ந்த விவசாயிகளுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள்
காட்டாற்றுக்கு அப்பால் உள்ளது. இதனால் சாகுபடி காலங்களில் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை வயல்களுக்கு கொண்டு செல்லும் போது காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்ல வேண்டி உள்ளது. நடவு செய்யும் காலங்களான புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் பெரும்பாலும் மழைபெய்யும் என்பதால் காட்டாற்றில் தண்ணீர் அதிகம் செல்லும்.
25 கிலோ மீட்டர்
இதனால் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை விவசாயிகள் எடுத்துச்செல்ல வாகனங்கள் மற்றும் மாட்டுவண்டியை பயன்படுத்த முடியாது. அப்படி வாகனங்களை பயன்படுத்தினால் காட்டாற்றுநீர் வாகனங்களை அடித்துச்செல்லவும் வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் ராஜாமடத்துக்கு சென்று அங்கிருந்து 2-ம் புலிக்காட்டுக்கு வந்து பின்னர் விவசாயநிலங்களுக்கு வர வேண்டும்.
இப்படி சுற்றி வருவதால் கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் தூரம் வீணாக அலைய வேண்டி உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயத்துக்கு தேவையான உரம் மற்றும் நாற்றுக்களை தலையில் வைத்துக்கொண்டு கழுத்தளவில் செல்லும் காட்டாற்றுநீரை கடந்து செல்லும் நிலை உள்ளது.
பாலம் கட்ட கோரிக்கை
மேலும் மாளியக்காடு, சேண்டாக்கோட்டை, காசாங்காடு, அக்கரைவயல் உள்ளிட்ட கிராமங்களை ஒட்டியுள்ள கதிராளம்மன் கோவில் காட்டாற்றைத்தாண்டி உள்ளது. இந்த கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தேரில் வைத்து கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் தூக்கிச்செல்வார்கள்.
இதைக்காண அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் வருகிறார்கள். இந்த கோவிலுக்குவரும் பக்தர்கள் காட்டாற்று தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிராம்பட்டினம் அருகே மாளியக்காடு ஊராட்சியில் காட்டாற்றை கடந்து செல்ல பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.