காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் வாலிபர் தற்கொலை
காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அஞ்சுகிராமம்:
காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 21). இவர் தாமரை பூ பறிப்பது மற்றும் கட்டிட வேலைக்கும் சென்று வந்தார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் கென்சியா(19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்தில் மணிகண்டனின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தனது காதல் மனைவியிடம் மணிகண்டன் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர், மனைவியிடம் பேசாமல் கோபத்துடன் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து அவரை சாப்பிடுவதற்காக மனைவி அழைத்தார். ஆனால், உள்ளிருந்து சத்தம் எதுவும் வரவில்லை.
இதனால், அதிர்ச்சி அடைந்த மனைவி உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, மணிகண்டன் தாயாரின் சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.