சுகாதார சீர்கேடு
செண்பகராமன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் கங்கை பரமேஸ்வரி கோவில் அருகில் உள்ள இடத்தில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு தீ வைக்கிறார்கள். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை பரவுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அதை சுவாசிப்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. எனவே பொது இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு எரிப்பதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், செண்பகராமன்புதூர்.
குடிநீர் வினியோகிக்க வேண்டும்
மாங்கோடு ஊராட்சியின் 9-வது வார்டில் காஞ்ஞான்காலை என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் தேக்க தொட்டியின் குழாய்கள் உடைக்கப்பட்டதால், கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இந்த பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய்களை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனிஷ், மாங்கோடு.
செடி-கொடிகள் அகற்றப்படுமா?
ஆரல்வாய்மொழி செக்போஸ்ட் பகுதியில் ஆரல்வாய்மொழி தெற்கு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மூலம் சுமார் 3000-க்கு மேற்பட்டவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த அலுவலகத்தை சுற்றி செடி-கொடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் பாம்பு போன்ற விஷஜந்துகள் அதிக அளவில் நடமாடுகிறது. இதனால் இந்த அலுவலகத்திற்கு பொது மக்கள் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே அலுவலகத்தை சுற்றி வளர்ந்து நிற்கும் செடி-கொடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேதுவேல், ஆரல்வாய்மொழி.
நிழற்குடை அமைக்க வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பறக்கை செல்லும் வழியில் தெற்கு கன்னங்குளம் உள்ளது. இந்த பகுதியில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்களில் ஏறி பயணம் செய்கிறார்கள். ஆனால் இங்கு நிழற்குடை இல்லை. இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றும், மழை பெய்தால் அதில் நனைந்தும் பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-சக்தி முருகன், தெற்குகன்னங்குளம்.
தெருவிளக்குகள் எரியவில்லை
சரக்கல்விளை வீட்டு வசதி வாரியம் எம்.காலனி அருகில் உள்ள தெருவில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பெண்கள் இந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மீட்டர் பெட்டி திறந்த நிலையில், குழந்தைகள் தொடும் தூரத்தில் உள்ளது. மேலும் அதில் வயர்கள் வெளியே நீட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் இருக்கிறது. எனவே தெருவிளக்கு எரியவும், மீட்டர் பெட்டியை உயரத்தில் பாதுகாப்பான முறையில் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், சரக்கல்விளை.
பள்ளத்தை மூட வேண்டும்
நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட குதிரைபந்திவிளை கிராமத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இது உருவாகி சுமார் 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை பள்ளம் மூடப்படவில்லை. இதனால் இந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், குதிரைபந்திவிளை.
சேதமடைந்த மின்கம்பம்
சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட கிறிஸ்துநகர் கார்டனில் அமைந்துள்ள பெந்தெகொஸ்தே சபை எதிரில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பி வெளியே தெரியும் அளவுக்கு சேதமடைந்து உள்ளது.. எப்போது வேண்டுமானாலும் மின் கம்பம் சாய்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.தர்மராஜன், அனந்தபத்மனாபபுரம்.