‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
10 ரூபாய் நாணயத்தை வாங்க தயக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் 10 ரூபாய் வைத்துள்ளவர்கள் அதனை மாற்ற முடியாமல் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சேக் பகுர்தீன், புதுக்கோட்டை.
சிதிலமடைந்த மின்கம்பம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் பெரிய ஏரியில் ஏற்கனவே நடப்பட்ட ஒரு மின்கம்பம் தற்போது மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிதிலமடைந்த மின்கம்பம்பத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரை, பெரம்பலூர்.
அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழஎசனை கிராமம் வழியாக செல்லும் டிப்பர் லாரிகள் அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றி செல்கிறது. இதனால் அங்குள்ள சாலைகள் மிகவும் சேதம் அடைந்து உள்ளன. ஒருசில டிரைவர்கள் தார்ப்பாய் போடாமல் சென்று வருவதால் அந்த வழியாக செல்பவர்கள் மீது கற்கள் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தார்ப்பாய் போடாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
மேம்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் பாலக்கரை மேம்பாலம் , பீமநகர் பகுதி பாலம் இறங்குகிற இடத்தில் குறிப்பாக 6 இடங்களில் விரிசல் ஏற்பட்டும், பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், இரவு நேரங்களில் அந்த மேம்பாலத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த மேம்பாலத்தை ஆய்வு மேற்கொண்டு இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சையது முஸ்தபா, பாலக்கரை, திருச்சி.
சுடுகாட்டுக்கு அடிப்படை வசதி செய்யப்படுமா?
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா மலையடிப்பட்டி கிராமம் ஆவாரம்பட்டி ஆதிதிராவிட மக்களின் சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கு சரியான பாதை வசதியோ, சாலையோ கிடையாது. மேலும், அங்கு தண்ணீர் மற்றும் மின்சார வசதி செய்து தரப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் உடல்களை அடக்கம் செய்ய வருபவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இங்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
கண்ணன், மணப்பாறை, திருச்சி.
தபால் நிலையத்தில் சர்வர் கோளாறு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்க நகரில் உள்ள தபால் நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள கணினியில் சர்வர் கோளாறு காரணமாக மணி ஆர்டர், பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கோளாறை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருராஜன், ஸ்ரீரங்கம்.