ரூ1லட்சம் நன்கொடை வழங்கிய இளநீர் பெண் வியாபாரிக்கு கலெக்டர் பாராட்டு
உடுமலை அருகே அரசு பள்ளியில் வகுப்பறைகள் கட்டிடம் கட்ட தனது பங்களிப்பாக ரூ.1லட்சம் நன்கொடை வழங்கிய இளநீர் பெண் வியாபாரியை கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.
உடுமலை
உடுமலை அருகே அரசு பள்ளியில் வகுப்பறைகள் கட்டிடம் கட்ட தனது பங்களிப்பாக ரூ.1லட்சம் நன்கொடை வழங்கிய இளநீர் பெண் வியாபாரியை கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.
நமக்கு நாமே திட்டம்
உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்கப்பள்ளியாக இருந்த பள்ளி, பின்னர் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2012-2013-ம் கல்வி ஆண்டில் 160 மாணவ, மாணவிகளே படித்து வந்த இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் 650 ஆக உள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாமல் பற்றாக்குறையாக உள்ளது.
இந்த நிலையில் நமக்கு நாமே திட்டத்தில் பள்ளிக்குத்தேவையான வகுப்பறை கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கு தேவையான, பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக முன்னாள் மாணவர் சங்கம், ஆசிரியர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் என்று நிதி வழங்கினர். மொத்தம் ரூ.15 லட்சம் சேர்ந்தது.
வகுப்பறை கட்டிடம்
இதைத்தொடர்ந்து, இந்த பள்ளி வளாகத்தில் தரைத்தளம், முதல் மற்றும் 2-வது தளத்துடன் மொத்தம் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தரைத்தளம் கட்டுவதற்கு அரசு, நமக்கு நாமே திட்டத்தில் ரூ.45 லட்சம் அனுமதி வழங்கியுள்ளது.
உடுமலை ஒன்றியத்தில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் பணிகளை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது இதுதான் முதல் முறை என்று உடுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணிகண்டன் தெரிவித்தார்.
பெண் இளநீர் வியாபாரி
இந்த நிலையில் இந்த பள்ளிக்கு எதிரே இளநீர் விற்பனை செய்யும் தாயம்மாள் (வயது45) என்பவர் இந்த பள்ளியின் முன்னாள் மாணவரான தனது கணவர் ஆறுமுகம் என்கிற அய்யாவுடன் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியர் என்.இன்பக்கனியை சந்தித்து பேசினார். அப்போது பள்ளியில் வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவது குறித்து கேட்டறிந்த தாயம்மாள் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1லட்சத்திற்கான காசோலையை தலைமையாசிரியரிடம் கொடுத்தார்.
இளநீர் விற்பனை செய்து சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து, பள்ளி வகுப்பறை கட்டுவதற்காக தனது பங்களிப்பாக ரூ.1லட்சம் வழங்கிய தகவல் தெரியவந்ததும் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் (சென்னை) ஜெயக்குமார் தாயம்மாளை வீடியோகால் மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினார்.
கலெக்டர் பாராட்டு
மேலும் தாயம்மாள் மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் ஆகியோரை நேரில் வரவழைத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். மேலும் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ரமேஷ், உடுமலை மாவட்ட கல்வி அதிகாரி பழனிச்சாமி ஆகியோரும் பாராட்டினர். பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.