விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி
விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பிரச்சினை குறித்து பல்லடம், கோவையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பல்லடத்தில் அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது.
பல்லடம்
விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பிரச்சினை குறித்து பல்லடம், கோவையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பல்லடத்தில் அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது.
இதுகுறித்து விசைத்தறி சங்க கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் கூறியதாவது:-
காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம்
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை.
எனவே கூலி உயர்வு வழங்கக்கோரி திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறியாளர்கள் நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். வேலை நிறுத்தத்தால் விசைத்தறி தொழிலை சார்ந்த சைசிங், நூற்பாலைகள், ஓ.இ., மில்கள், பீஸ் செக்கிங், மடிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
உற்பத்தி பாதிப்பு
இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று விசைத்தறிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள், மற்றும் அதனைச் சார்ந்து இயங்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் ரூ.300 கோடி அளவுக்கு காடா ஜவுளித்துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்ட தொழிலாளர்கள் நலத்துறை அலுவலகத்தில் இருந்து ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
அதன்படி விசைத்தறி சங்க கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் சென்றோம். ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மட்டுமே வந்தனர். பல்லடம், அவினாசி ஜவுளி உற்பத்தியாளர்கள் வரவில்லை. சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் 12 சதவீத கூலி உயர்வு தருவதாக கூறினர். இதனை நாங்கள் ஏற்கவில்லை.
சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதமும், மற்ற ரகத்திற்கு 20 சதவீதமும் அறிவித்துவிட்டு உயர்த்தப்பட்ட கூலியை குறைப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தோம். இரு தரப்பிலும் பேசிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையை மீண்டும் ஜனவரி 20-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
நாளை ஆலோசனை
இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள செஞ்சேரிபுத்தூர் கருப்பராயன் கோவில் வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) விசைத்தறியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.