சிவகங்கை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி தொடங்கியது

சிவகங்கை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி தொடங்கியது.

Update: 2022-01-11 18:32 GMT
சிவகங்கை, 

சிவகங்கை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி தொடங்கியது.

ரூ.1 கோடியில்...

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் நோய் ஏற்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
 இதைத்தொடர்நது அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்க வழி செய்தது. இதை தொடர்ந்து பிரதமரின் நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி மதிப்பில் காற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரம் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. 

கலெக்டர் பார்வையிட்டார்

இந்த திட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்திக்கலன் எந்திரம் அமைக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.
இந்த புதிய எந்திரம் செயல்படுவதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதிபாலன், துணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர் ராம்கணேஷ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலமுருகன், மருத்துவ அலுவலர் டாக்டர் ரபீ, ஆகியோர் உடனிருந்தனர்.
 பின்னர் கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-

1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி

கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்த்து 2,800 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இவைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 1,342 படுக்கைகளும் 193 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளும் உள்ளன.
 இதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1066 ஆக்சிஜன் படுக்கைகளும், 124 தீவிர சிகிச்சை பிரிவிலும் உள்ளன. மாவட்டத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளில் அடுத்தவருக்காக 794 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன. 
3-வது அலையை சமாளிக்க
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்கர் வசதி உள்ளது. தற்போது இங்கு கூடுதலாக தொடங்கபட்டுள்ள இந்த ஆக்சிஜன் உற்பத்தி கலனில் இருந்து ஒரு நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதனால் கொரோனாவின் 3-வது அலையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. தேவையில்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் அத்தியாவசியமான சூழ்நிலைகளில் வெளியில் வருவதாக இருந்தால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்