மது குடிக்க பணம் தராததால் வீட்டை தீ வைத்து கொளுத்திய வாலிபர் கைது

மயிலாடுதுறை அருகே மது குடிக்க பணம் தராததால் வீட்டை தீ வைத்து கொளுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-11 18:16 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மது குடிக்க பணம் தராததால் வீட்டை தீ வைத்து கொளுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுகுடிக்க பணம்
மயிலாடுதுறை அருகே அருண்மொழிதேவன் குடியான தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 50). திருமணமாகாத இவர், கூலி வேலை செய்து தனியாக கூரை வீட்டில் வசித்து வருகிறார். 
அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ்(25). இவர், கிருஷ்ணமூர்த்தியிடம் நன்கு பழகி வந்ததாக கூறப்படுகிறது.. இதனால் விக்னேஷ், மது குடிப்பதற்காக அடிக்கடி கிருஷ்ணமூர்த்தியிடம் பணம் வாங்கி சென்றுள்ளார். 
வீ்ட்டுக்கு தீ வைப்பு
நேற்று முன்தினம் விக்னேஷ் மது குடிப்பதற்காக கிருஷ்ணமூர்த்தியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது கிருஷ்ணமூர்த்தி தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், பிளாஸ்டிக் கேனில் மண்எண்ணெய் எடுத்து வந்து கிருஷ்ணமூர்த்தியின் கூரை வீட்டின் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
சேத மதிப்பு ரூ.1 லட்சம்
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த பகுதி மக்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.
கைது-சிறையில் அடைப்பு
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்