கீரமங்கலத்தில் பொங்கல் விற்பனைக்காக வாழைத்தார்கள், பரங்கி காய்கள் கமிஷன் கடைகளுக்கு வந்தது

கீரமங்கலத்தில் உள்ள காய்கனி கமிஷன் கடைகளுக்கு பொங்கல் விற்பனைக்காக வாழைத்தார்கள், பரங்கிகாய்கள் வந்தது.

Update: 2022-01-11 18:10 GMT
கீரமங்கலம்:
வாழைத்தார்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் செரியலூர், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, பனங்குளம், மறமடக்கி உள்பட சுமார் 50 கிராமங்களில் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, மும்பை வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. 
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் வாழைத்தார்கள் விற்பனை குறைந்துள்ளதால் விவசாயிகள் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்களை கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், கைகாட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.
பொங்கல் விற்பனை
இந்த நிலையில் கீரமங்கலம் பகுதியில் உள்ள காய்கனி கமிஷன் கடைகளுக்கு நேற்று முதல் பொங்கல் விற்பனைக்காக வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆனால் வழக்கம் போல விலை குறைவாகவே விற்பனை ஆனதாக விவசாயிகள் கூறுகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கஜா புயலுக்கு முன்பு வரை வாழைத்தார்கள் ஓரளவு கட்டுபடியான விலைக்கு விற்றது. அதன் பிறகு உற்பத்தி செலவுக்கு கூட வாழைத்தார்கள் விற்பனை செய்ய முடியவில்லை. ஊரடங்கு நேரத்தில் வாழைத்தார்களை விற்க முடியாமல் தோட்டங்களில் பழுத்து அழுகியது. இப்போது பொங்கலுக்கு கட்டுபடியான விலைக்கு விற்பனை ஆகும் என்று எதிர்பார்த்தோம். இப்போதும் அப்படித்தான் உள்ளது. சில வருடங்களாக இழப்போடு தான் வாழைத்தார்கள் விற்பனை செய்கிறோம் என்றனர். அதே போல பரங்கி, பூசணிக்காய்களும் விற்பனைக்காக கமிஷன் கடைகளுக்கு வந்திருந்தது.

மேலும் செய்திகள்