பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பென்னாகரம் நல்லம்பள்ளி வாரச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
பென்னாகரம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பென்னாகரம், நல்லம்பள்ளி வாரச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
வாரச்சந்தை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சந்தை தோப்பு என்ற இடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இந்த வாரச்சந்தை கூடியது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்த சந்தைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி, வெள்ளாடுகளை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வந்து ஆடுகளை வாங்கி சென்றனர். எடைக்கு ஏற்றார் போல் ரூ.2 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை ஆடுகள் விலை போனது. இந்த ஆடுகளை வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டு விலை கேட்டதால் விற்பனை படுஜோராக நடைபெற்றது. இந்த சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
நல்லம்பள்ளி
நல்லம்பள்ளியில் நேற்று கால்நடைகள் வாரச்சந்தை கூடியது. இந்த வாரச்சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்காக குவிந்தனர். பொங்கல் பண்டிகை முன்னிட்டு நேற்று சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக இருந்தது. எடைக்கு ஏற்றார் போல் ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.22 ஆயிரம் வரையில் ஆடுகள் விற்பனையானது.
இந்த சந்தையில் அதிகாலை முதலே வியாபாரிகள் திரண்டு ஆடுகளை போட்டி போட்டு வாங்கினர். இதனால் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர். வாரச்சந்தைகளில் ஆடுகள் வாங்க ஏராளமானோர் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் திரண்டனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.