அரசு வேலை கிடைக்காததால் விரக்தி தர்மபுரியில் என்ஜினீயர் தற்கொலை
அரசு வேலை கிடைக்காத விரக்தியால் தர்மபுரியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி இந்திரா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் பிரமோத்குமார் (வயது25). என்ஜினீயரான இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் அரசு வேலையில் சேர வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்து வந்தார். இதற்காக அவர் அரசு வேலையில் சேர்வதற்கு முயற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அரசு வேலை கிடைக்காததால் பிரமோத்குமார் விரக்தியில் இருந்தார்.
சம்பவத்தன்று குடும்பத்தினர் அனைவரும் கோவைக்கு சென்றனர். ஆனால் பிரமோத்குமார் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். வெளியூர் சென்ற பெற்றோர் வீட்டுக்கு வந்த போது பிரமோத்குமார் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.