தொப்பூர் கணவாயில் இரும்பு தாது ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தொப்பூர் கணவாயில் இரும்பு தாது ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் இரும்பு தாது ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரி கவிழ்ந்தது
சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து இரும்பு தாது ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் வழியாக நேற்று வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது37) என்பவர் ஓட்டி வந்தார். தொப்பூர் கணவாயில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி லாரி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாகன ஓட்டிகள் அவதி
பின்னர் பொக்லைன் மற்றும் கிரேன் மூலம் கவிழ்ந்த லாரியை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி- சேலம் மார்க்கமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.