9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறையினர் 700 பேர் விடுப்பு எடுத்து போராட்டம்
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் 700 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் 700 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.
போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள், பிற துறை சார்ந்த பணிகளுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையினர் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஈரோடு மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடந்தது.
இதன் காரணமாக ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் இல்லாமல் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
பொதுமக்கள் ஏமாற்றம்
இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாஸ்கர்பாபு கூறுகையில், "எங்களின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். இந்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 700 ஊழியர்கள் ஈடுபட்டனர். இனியும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற பிப்ரவரி மாதம் 2, 3-ந் தேதிகளில் 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம்", என்றார்.
ஊரக வளர்ச்சி துறையினர் போராட்டம் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்க வந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் பலர் அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.