மீனவர் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்
நாகையில், மீனவர் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
நாகப்பட்டினம்:
நாகையில், மீனவர் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டுக்குள் புகுந்த வாலிபர்
நாகை டாடா நகரை சேர்ந்தவர் காளிதாஸ்(வயது 30). மீனவரான இவர், தனது தாய் கண்ணம்மாள்(60). மனைவி மலர்கொடி(24). இவர்கள் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காளிதாஸ் வீட்டுக்குள் புகுந்துள்ளார். அப்போது தூக்கத்தில் இருந்து எழுந்த மலர்க்கொடி அந்த வாலிபரை பார்த்ததும் சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த வாலிபர் வீட்டை விட்டு வெளியே ஓட முயன்றார்.
மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்
மலர்க்கொடியின் சத்தம் கேட்டு எழுந்த காளிதாஸ் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அங்கு ஓடி வந்து தப்பி ஓடிய முயன்ற வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர்.
பின்னர் வாலிபரை அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
பரிதாப சாவு
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக நேற்று காலை நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்த வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி உள்பட போலீசார் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருட வந்தாரா?
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? திருடுவதற்காக காளிதாஸ் வீட்டுக்குள் புகுந்தாரா? அல்லது வேறு எதற்காக புகுந்தார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.