தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
கம்பம் 29-வது வார்டில் வனச்சரக அலுவலக சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதோடு மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். -முருகேசன், கம்பம்.
கல்லூரி மாணவர்கள் தவிப்பு
பழனியில் பழனியாண்டவர் கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக சாலையை கடந்து செல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால் ரோட்டின் நடுவே தடுப்புச்சுவர் இருப்பதால் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே தடுப்புச்சுவர் இடையே மாணவர்கள் சென்று வரும் வகையில் சிறிய பாதை அமைத்தால் வசதியாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரவிச்சந்திரன், பழனி.
தெருநாய்கள் தொல்லை
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவை தெருவில் தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து கடிக்கின்றன. இதனால் மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் நோய் பாதித்து உடல் முழுவதும் புண்களுடன் சில நாய்கள் திரிகின்றன. எனவே தெருநாய்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -அரவிந்த், கோட்டைப்பட்டி.
விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் வெளியேறும் பகுதியில் பெரிய பள்ளம் உருவாகி விட்டது. மேலும் அது வளைவான இடமாக இருப்பதால் பள்ளத்தில் இறக்கி பஸ்களை திருப்ப முடியாமல் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும். -ராஜா, திண்டுக்கல்.