மழை ஏற்படுத்திய பாதிப்பால் நெல் மகசூல் வீழ்ச்சி
திருவாரூர் மாவட்டத்தில் மழை ஏற்படுத்திய பாதிப்பால் நெல் மகசூல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏக்கருக்கு 15 மூட்டைகளே கிடைப்பதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
திருவாரூர்:-
திருவாரூர் மாவட்டத்தில் மழை ஏற்படுத்திய பாதிப்பால் நெல் மகசூல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏக்கருக்கு 15 மூட்டைகளே கிடைப்பதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
கனமழையால் பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி, 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கர் பரப்பளவில் தாளடி சாகுபடி என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரத்து 160 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி நடந்தது. கடந்த நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். கதிர் வந்த நிலையில் உரங்கள் தட்டுப்பாடு காரணமாக வளர்ச்சி பாதிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து மீண்டும் பாதிக்கப்பட்டன.
மகசூல் இழப்பு
பல இடங்களில் வயல்களில் தேங்கிய மழைநீரில் பயிர்கள் சாய்ந்து மகசூல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. குறுவை அறுவடையின் போது பெய்த கன மழையால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சம்பா அறுவடையின் போதும் மழையால் மகசூல் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
15 மூட்டை
ஏக்கருக்கு 30 மூட்டை நெல் மகசூல் கிடைக்க வேண்டிய இடத்தில் 15 முதல் 18 மூட்டைகளே கிடைப்பதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மழை காரணமாக கூடுதலாக செலவு செய்து சாகுபடி பணிகளை மேற்கொண்டோம். ஆனால் தற்போது மகசூலில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றனர்.