சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட்டை விரிவுபடுத்த வாரச்சந்தையின் ஒரு பகுதி இடத்தை எடுக்கக்கூடாது நகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் மனு

சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட்டை விரிவுபடுத்த வாரச்சந்தையின் ஒரு பகுதி இடத்தை எடுக்கக்கூடாது என நகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.;

Update: 2022-01-11 15:17 GMT
சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட்டை விரிவுபடுத்த வாரச்சந்தையின் ஒரு பகுதி இடத்தை எடுக்கக்கூடாது என நகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் மனு அளித்தனர். 
வாரச்சந்தை
சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் நகராட்சி வாரச்சந்தை உள்ளது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வாரச்சந்தையில் மளிகை கடை, தின்பண்ட கடைகள், ரெடிமேடு ஆடைகள், கறிக் கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள் என 500 கடைகள் உள்ளன. 
மேலும் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் வாரம்தோறும் பொருள் வாங்குவதற்கு இங்கு வந்து செல்வார்கள் 
ரூ.4½ கோடி மதிப்பீட்டில்...
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சந்தையின் ஒரு பகுதியில் கடைகள் கட்டப்பட்டு மின் வசதியுடன் தினசரி காய்கறி மார்க்கெட் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ரூ.4 கோடிேய 60 லட்சம் மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் நவீன வசதிகளுடன் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
இதற்காக வாரச்சந்தையில் உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியை மீண்டும் எடுக்க திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வாரச்சந்தை வியாபாரிகள் கடந்த 21-ந் தேதி சந்தை வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தங்களுடைய எதிர்ப்பை காட்டினர்.
மனு
இந்த நிலையில் நேற்று காலை வாரச்சந்தை வியாபாரிகள் சங்க செயலாளர் தனலட்சுமி, பொருளாளர் மயில்சாமி, மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. நகர செயலாளர் ஸ்டாலின் சிவகுமார் உள்பட 150-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒன்று திரண்டு சத்தியமங்கலம் நகராட்சிக்கு வந்தனர். 
பின்னர் அவர்கள் அனைவரும் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தினசரி மார்க்கெட் விரிவாக்கத்துக்காக வாரச்சந்தையின் ஒரு பகுதியை எக்காரணம் கொண்டும் எடுக்கக்கூடாது,’ என்றனர். 
வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘இந்த வாரச்சந்தையில் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் ஏழை வியாபாரிகளே. சின்ன முதலீட்டில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம். மேலும் தற்போது உள்ள வாரச்சந்தையே தங்களுக்கு போதுமானதாக இல்லை. இதில் தினசரி மார்க்கெட்டுக்கு வாரச்சந்தையில் இருந்து இடம் எடுத்தால் எங்களுடைய வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் நாங்கள் எங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். ஆகவே வாரச்சந்தையில் உள்ள ஒரு பகுதி இடத்தை தினசரி மார்க்கெட் அமைக்க எடுக்கக்கூடாது. மேலும் தினசரி மார்க்கெட்டை நவீன மயமாக்குவதற்காக வாரச்சந்தையை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது,’ என கோரி மனு அளித்து உள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்