கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவி கொலை, மீனவர் தற்கொலை
கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்றுவிட்டு, மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.
கீழக்கரை,
கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவியை ெகான்றுவிட்டு, மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி கொலை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி அடஞ்சேரியில் வசித்து வந்தவர் லாடமுருகன் (வயது 41). மீனவர். இவருடைய மனைவி முத்துலட்சுமி (35).
இவர்களுக்கு கங்காதரன் (வயது5 என்ற மகனும், ஜமுனா (2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். சமீப காலமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு லாடமுருகன் வீட்டுக்கு வந்துள்ளார். 2 குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.
அப்போது லாடமுருகன், மனைவி முத்துலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். 2 பேருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த லாடமுருகன் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டுள்ளார். அப்போது சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சிறுவன் கங்காதரன் அலறியடித்து கதவை திறந்து வெளியே ஓடிவந்து அழுதுகொண்டு இருந்தான்.
தற்கொலை
சற்று நேரம் கழித்து அவனது அழுகையை கவனித்த அக்கம்பக்கத்தினர் என்னவென்று விசாரித்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டில் முத்துலட்சுமி ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கணவர் லாட முருகன் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே இதுகுறித்து ஏர்வாடி போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
2 பேர் உடல்களையும் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறிய போது, “கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது திடீரென லாடமுருகன் கடலில் குதித்துவிட்டாராம். பின்னர் உடன் சென்றவர்கள் அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்ததாகவும், அவர் அடிக்கடி மனைவியுடன் பிரச்சினை செய்து வந்ததாகவும், இந்தநிலையில்தான் மனைவியை கொன்று அவர் தற்கொலை செய்துள்ளார்” என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அவர்களுடைய 2 பிள்ளைகளும் பெற்றோரை இழந்து பரிதவித்து வருகி்ன்றன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.