கும்மிடிப்பூண்டி அருகே 8-வது நாளாக தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே 8-வது நாளாக தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-01-11 14:44 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த 10 வருடத்துக்கு மேலாக வேலை செய்து வந்த 4 ஒப்பந்த தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகத்தினர் முன் அறிவிப்பின்றி வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைக்கண்டித்து மற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை முன்பு அமர்ந்து கடந்த 3-ந் தேதி முதல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தொழிற்சாலையின் வாசலிலேயே தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்து கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே வருவாய்த்துறையினர் சார்பாக தொழிலாளர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில், 8-வது நாளான நேற்று தொழிலாளர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் தொழிற்சாலை வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்