மெக்கானிக்கிடம் ரூ.2 லட்சத்து 84 ஆயிரம் மோசடி

மருத்துவ பயன்பாட்டு திரவம் வாங்கிக்கொள்வதாக கூறி மின்னஞ்சல் அனுப்பி ராமநாதபுரம் அருகே மெக்கானிக்கிடம் ரூ.2 லட்சத்து 84 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-01-11 14:39 GMT
ராமநாதபுரம், 
மருத்துவ பயன்பாட்டு திரவம் வாங்கிக்கொள்வதாக கூறி மின்னஞ்சல் அனுப்பி ராமநாதபுரம் அருகே மெக்கானிக்கிடம் ரூ.2 லட்சத்து 84 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மெக்கானிக்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மேலச்சிறுபோது பகுதியை சேர்ந்தவர் கூடலிங்கம் என்பவரின் மகன் விஜயகுமார் (வயது42). வெளிநாட்டில் டர்பைன் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த இவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இங்கு சிறுதொழில் செய்யும் எண்ணத்தில் தனது பெயரை பதிவு செய்து வைத்துள்ளார். 
இந்தநிலையில் இவரின் மின்னஞ்சல் முகவரிக்கு மேற்கு ஆப்பிரிக்காவின் கானா பகுதியில் இருந்து வந்த மின்னஞ் சலில் தாங்கள் இயற்கை மருத்துவ முறை சிகிச்சை செய்து வருவதாகவும் தங்களுக்கு மருத்துவ பொருள் பயன் பாட்டிற்காக பென்டோனிக் என்ற திரவம் தேவைப்படுவ தாகவும் அது இந்தியாவில் அதிகம் கிடைப்பதால் அதனை பெற்று அனுப்புவதற்கு நல்ல தொழில் நிறுவனம் வேண்டும் என்றும் கேட்டு உள்ளனர். 
தொழில் வாய்ப்பு
இதனை கண்ட விஜயகுமார் தனது சிறுதொழில் நிறுவனத் தின் மூலம் தான் வாங்கி அனுப்புவதாக தெரிவித்துள்ளார். அதற்கு அந்த மின்னஞ்சல் தகவலில் இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு அதில் வாங்கி அனுப்பு மாறும் அவர்கள் தரமான திரவம் வைத்துள்ளதாகவும் கூறி அவர்களின் முகவரி மற்றும் வங்கி விவரங்களை அனுப்பி உள்ளனர். இதனால் தனக்கு வெளிநாட்டின் வர்த்தக தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று எண்ணி அந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தபோத 500 மில்லி திரவம் ரூ.2 லட்சத்து 84 ஆயிரம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டுக்கொண்ட விஜயகுமார் அந்த பணத்தை செலுத்தி திரவத்தை பெற முயன்ற போது 500 மில்லி தரமுடியாது ஒரு லிட்டராகத்தான் தரமுடியும் மேலும் ரூ.2 லட்சத்து 84 ஆயிரம் அனுப்புமாறு கூறியுள்ளனர். இதனை கட்ட முடியாத நிலையில் விஜயகுமார் தனது ஆர்டரை கேன்சல் செய்துள்ளார். இதன்பின்னர் தனது பணத்தினை திரும்ப பெறுவதற்காக தொடர்பு கொள்ள முயன்றபோது அது போலி என்பதும் மேற்கு ஆப்பிரிக்கா பெயரில் பேசியதும், பணம்பெற்ற நிறுவனமும் ஒன்றுதான் என்பதும் தெரியவந்தது. 
விசாரணை
மின்னஞ்சலில் தொடர்புகொண்டு வாங்குபவர், விற்பவர் பெயரில் ரூ.2 லட்சத்து 84 ஆயிரம் ஒரே நபர்தான் மோசடி செய்ததும் தெரியவந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயகுமார் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன்படி ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்