விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:-
100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
100 நாள் வேலை திட்டத்தில் சாதிய அடிப்படையில் சம்பளம் வழங்குவதை தவிர்த்து அனைவருக்கும் சமமான சம்பளம் வழங்க வேண்டும். காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும் என்பதை மாற்றி 9 மணிக்கு வேலையை தொடங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தவும், சம்பளத்தை ரூ.600 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழுதடைந்த தொகுப்பு வீடுகள்
பழுதடைந்த தொகுப்பு வீடுகளை அகற்றி புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திர ராமன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், விவசாய தொழிலாளர்களிடம் பொங்கல் முடிந்தவுடன் 100 நாள் வேலை திட்ட பணிகள் துரிதமாக நடைபெற நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
திருவாரூர்
கடந்த 6 மாதங்களாக வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். வேலை இல்லா காலங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு பாதி சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ஒன்றியம் மாங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர் ஜெயசந்திரன், கிளை செயலாளர் ரவீந்திரன், துணை செயலாளர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. இதே போல் திருவாரூர் ஒன்றியத்தில் கூடூர், திருநெய்ப்பேர், வேப்பத்தாங்குடி, பின்னவாசல் உள்ளிட்ட 14 ஊராட்சி மன்ற அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.