தடுப்பூசி போடாதாவர்களுக்கே 75 சதவீதம் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-01-11 14:10 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்றும் அதற்கு அடுத்தபடியாக ஒமைக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிக அதிகமாகி கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளது. 
தமிழகத்தில் அதிகரித்து வரும் தொற்று பாதிப்பு எண்ணிக் கையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று உயர்ந்து வருவதை போலவே ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது. 
அதிர்ச்சி தகவல்
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பாதிக்கப் பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக் காரர் களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து உள்ளனர். தொற்று பரவியுள்ள பகுதிகளில் சுகா தாரத்துறையினர் முகாமிட்டு மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு தொற்று ஏற்பட்ட தற்கான காரணத்தையும் ஆராய்ந்தனர். இந்த ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகஅளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளதில் பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போடாதவர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
ஆய்வு
இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் கூறியதாவது:- மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்ததில் அவர ்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 2 நாட்களுக்கு முன் 58 பேர் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதில் 41 பேர் தடுப்பூசி போடாதவர்கள். நேற்று முன்தினம் 80 பேர் கண்டறியப் பட்டதில் 60 பேர் தடுப்பூசி போடாதவர்கள். 
இவ்வாறு தடுப்பூசி போடாமல் தொற்று வந்துள்ளவர்களுக்கு அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அளவிற்கு உடல்நிலை மாறி உள்ளது. மற்றவர்களான தடுப்பூசி போட்டவர்கள் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை பெறும் வகையில் உடல்நலத்துடன் உள்ளதோடு சீக்கிரம் இயல்பு நிலைக்கு வருகின்றனர். 
பாதிப்பு அதிகம்
தற்போது தொற்று அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது. தடுப்பூசி போடாதவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இவ்வாறு தடுப்பூசி போடாத அதிகம்பேருக்கு தொற்று வரும்போது தொற்றின் சாதாரண வீரியம் அதிகரித்து பாதிப்பும் அதிகமாகிறது. எனவே, அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்