ஊரக வளர்ச்சி அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-11 14:06 GMT
ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்படுவதை படத்தில் காணலாம்.
திருவாரூர்:-

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

9 அம்ச கோரிக்கைகள்

கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்து பணிவரன் முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 3 கட்ட போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 
அதன்படி கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனையடுத்து நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் மற்றும் தர்ணா போராட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். 

விடுப்பு எடுத்து போராட்டம்

ஆனால் தர்ணா போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் வசந்தன், செயலாளர் செந்தில் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்பட அனைத்து ஒன்றிய அலுவலகங்களும் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. 

மேலும் செய்திகள்