மஞ்சள் குலைகள் அறுவடை தொடங்கியது

தூத்துக்குடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் குலைகள் அறுவடை தொடங்கி நடந்து வருகிறது;

Update: 2022-01-11 13:31 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் குலைகள் அறுவடை தொடங்கி நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை என்றாலே தித்திக்கும் கரும்பு, மணக்கும் மஞ்சள் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் மங்களகரமான பொருளாகும். இதனால் பொங்கலை முன்னிட்டு மஞ்சள் குலைகளை வைத்து வழிபட்டு, அதனை வீடுகளில் பத்திரமாக எடுத்து வைப்பது வழக்கம். அவ்வாறு வைக்கும் மஞ்சள் குலைகள் சில நாட்களில் தானாக முளைத்து வந்தால், குடும்பம் விருத்தி அடையும் என்பது ஐதீகம்.
இத்தகைய மஞ்சள் தூத்துக்குடி அருகே உள்ள சக்கம்மாள்புரம், சேர்வைக்காரன் மடம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள சாலையில் சென்றாலே மஞ்சள் மணமும் மனதை கவருகிறது.
தனி மணம்
பல ஊர்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டாலும், இந்த பகுதியில் உள்ள மஞ்சளுக்கு தனி மணம் உண்டு என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் கட்டி செம்மண் தரையிலும், மற்ற தரைகளிலும் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. ஆனால் சக்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம் பகுதியில் செம்மண் உதிரியாக உள்ளது. இதனால் இந்த மஞ்சளுக்கு தனி மவுசு உள்ளது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பலர் மஞ்சள் சாகுபடி செய்து உள்ளனர்.
சேர்வைக்காரன் மடம், சக்கம்மாள்புரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக மட்டும் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மஞ்சள் அறுவடையை தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்து உள்ளது. இதனால் மஞ்சள் நன்கு வளர்ந்து உள்ளது.
பாதிப்பு இல்லை
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், “சேர்வைக்காரன் மடம், சக்கம்மாள்புரம் பகுதியில் உள்ள மஞ்சள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெளி மாநிலங்களில் தமிழர்கள் வாழும் இடங்களுக்கும் அனுப்பி வருகிறோம். கொரோனா காரணமாக மஞ்சள் விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மொத்த வியாபாரிகளுக்கு ஒரு மஞ்சள் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்கிறோம்” என்றார்.

மேலும் செய்திகள்