விசாரணை என்ற பெயரில் ‘குற்றம் செய்யாதவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரக்கூடாது': காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு

குற்றம் செய்யாத ஒருவரை விசாரணை என்ற பெயரில் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரக்கூடாது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.

Update: 2022-01-11 10:39 GMT
காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் ஆகியோர் அறிவுரையின் பேரில் காஞ்சீபுரத்தில் குற்றங்களை தடுப்பது குறித்து, வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியர் சீசர் தலைமையில் நடந்தது. உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் பிரபாகர், சிவகாஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியர் சீசர் பேசும்போது:-

‘கடை வியாபாரிகளாகிய நீங்கள் வாடிக்கையாளர்களை பாதுகாப்பது உங்களது கடமையாகும். வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க ‘பார்க்கிங்' வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பட்டுக்கு புகழ் பெற்ற காஞ்சீபுரம் நகரில் தரகர்களால் கலங்கம் ஏற்பட்டு வருகிறது.

இதனால், காஞ்சீபுரத்தின் பாரம்பரியத்தை காக்க வேண்டிய நிலமைக்கு நாம் தள்ளப் பட்டுள்ளோம். வியாபாரிகளாகிய நீங்கள் 'கேமராக்களை' கடைக்கு உள்ளே மட்டும் வைத்தால் போதாது. வெளியில் நடக்கும் சம்பவங்களையும் பதிவு செய்யும் வகையில் 'கேமராக்களை' பொருத்த வேண்டும்.

குற்றம் செய்யாத ஒருவரை விசாரணை என்ற பெயரில் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரக்கூடாது'

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்