தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா உறுதி
தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.;
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி விடுதி மாணவர்கள், 2 பிரபல துணிக்கடை ஊழியர்கள், தாம்பரத்தில் உள்ள கல்லூரி விடுதி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள்
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் பணிபுரியும் 36 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அதன்படி தாம்பரம் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள்-14, மாநகராட்சிக்கு உட்பட்ட அலுவலகங்களான பம்மலில் 17 பேர், செம்பாக்கத்தில்-5 பேர் என 36 ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் நேற்று மட்டும் 237 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 940 ஆக அதிகரித்துள்ளது.