அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் 13-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் 13-ந்தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
காரைக்குடி,
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் 13-ந்தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
சொர்க்கவாசல் திறப்பு
காரைக்குடி அருகே உள்ளது அரியக்குடி. இங்கு இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று கொரோனா விதிமுறைகளுக்குட்பட்டு இந்த விழா நடைபெற உள்ளது.
திருவேங்கடமுடையான் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரத்தில் அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்த புறப்படுகிறார். 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன் பின்னர் நம்மாழ்வார் மரியாதை நடைபெற்று காலை 6.30 மணிக்கு பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.
பக்தர்கள் அனுமதி
தொடர்ந்து தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையொட்டி தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின்படி கொரோனா விதிமுறைகளுக்குட்பட்டு வைகுண்ட ஏகாதசி தினம் அன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அவ்வாறு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும். மேலும் போதிய சமூக இடைவெளியுடன் சென்று தரிசனம் செய்ய கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தனலெட்சுமி மற்றும் பரம்பரை அறங்காவலர் சேவு.அழகிய வானப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்