கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கும், பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மைக்கும், பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா
கர்நாடகத்தில் கடந்த மாதம் (டிசம்பர்) இறுதி முதல் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாகவும், எனவே மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கும்படியும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளுக்கு நாள் வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மாநிலத்தின் பிற பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்த வண்ணம் உள்ளது. ஆனால் மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கொரோனா 2-வது அலையை போலவே சாதாரண மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளையும் கொரோனா தாக்கி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அத்துடன் பஸ், மெட்ரோ ரெயில்களில் 50 சதவீத பேர் மட்டுமே பயணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
பா.ஜனதா மாநில தலைவர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக அரசின் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அறிகுறி இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பசவராஜ்பொம்மைக்கு பாதிப்பு
இதற்கிடையே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு லேசான உடல் சோர்வு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் பரிசோதனை செய்து கொண்டார். அவரது பரிசோதனை முடிவு நேற்று மாலை வெளியானது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டிேலயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களில் என்னை சந்தித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எனக்கு லேசான பாதிப்புகள் உள்ளன. அதனால் நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். நான் நலமாக இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி
பெங்களூருவில் நேற்று அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். எழுத்தாளர் சந்திரசேகர் பட்டீலின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர் பங்கேற்ற இடங்களில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோர் ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டிருந்தனர். இந்த நிலையில் 2-வது முறையாக அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
12 ஆயிரத்தை நெருங்கியது
இதற்கிடையே கர்நாடகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 479 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 11 ஆயிரத்து 698 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 63 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 374 ஆக உயர்ந்துள்ளது.
குணம் அடைந்தவர்கள்
ஒரேநாளில் 1,148 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 65 ஆயிரத்து 105 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 7.77 ஆக உள்ளது. புதிதாக கொரோனா பாதித்தோரில் பல்லாரியில் 93 பேர், பெலகாவியில் 129 பேர், பெங்களூரு புறநகரில் 143 பேர், பெங்களூரு நகரில் 9,221 பேர், பீதரில் 37 பேர், சாம்ராஜ்நகரில் 40 பேர், சிக்பள்ளாப்பூரில் 53 பேர், சிக்கமகளூருவில் 43 பேர், சித்ரதுர்காவில் 27 பேர்.
தட்சிண கன்னடாவில் 176 பேர், தாவணகெரேயில் 22 பேர், தார்வாரில் 144 பேர், கதக்கில் 16 பேர், ஹாசனில் 171 பேர், கலபுரகியில் 88 பேர், குடகில் 23 பேர், மண்டியாவில் 306 பேர், மைசூருவில் 309 பேர், சிவமொக்காவில் 75 பேர், துமகூருவில் 139 பேர், உடுப்பியில் 219 பேர், உத்தரகன்னடாவில் 100 பேர், விஜயாப்புராவில் 28 பேர் உள்ளனர்.
4 பேர் உயிரிழந்தனர்
மாநிலத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பெங்களூரு நகரில் 2 பேரும், மைசூரு, ராமநகரில் தலா ஒருவரும் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.